Published Date: May 20, 2023
CATEGORY: CONSTITUENCY

அனைவருக்கும் இ-சேவை திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் 13,336 இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு இ- சேவை பயனர் குறியீட்டை அமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.
தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களுக்கும் இ-சேவைமையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டமானது படித்த இளைஞர்களையும், தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் துவக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் ஆளுமை முகாமை, அரசு இ-சேவை மையங்களான தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வழங்கும் சங்கங்கள், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், மீன்வளத்துறை மற்றும் கிராமப்புற தொழில் முனைவோர் மூலம் மக்களுக்கான அரசின் சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்கி வருகிறது. மேலும் மின்னணு சேவைகளை குடிமக்களுக்கான பொது இணையதளம் வாயிலாகவும் வழங்கி வருகின்றது.
இதை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது, 'அனைவருக்கும் இ-சேவை திட்டம்' மூலம் தற்போது அனைத்து குடிமக்களுக்கும் இ-சேவை மையங்கள் தொடங்கி பொதுமக்களுக்கான அரசின் இணைய வழி சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே பெறுவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் நோக்கமானது இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து இ-சேவை மையத்தில் மக்கள் காத்திருக்கும் நேரத்தை குறைத்து மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவையை வழங்குவதாகும்.
மேலும் இ-சேவை வலைதளத்திலிருந்து (www.tnesevai. tn.gov.in/www. tnega.tn.gov.in) என்ற இணைய வழி சேவைகளை மக்களுக்கு வழங்கும், அனைத்து குடிமக்களுக்கும் இ- சேவை மையங்களை தொடங்கும் இத்திட்டத்தில் பயன்பெற இ-சேவை மையம் தொடங்க அனுமதிக்கப்படுபவர்களுக்கு, பயனர் எண் மற்றும் கடவு சொல் (யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு) விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங்கப்படுகிறது. இதற்கென மதுரையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அனைவருக்கும் இ-சேவை திட்டத்தின் கீழ் 13,336 இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு இ-சேவை பயனர் குறியீட்டை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைச் செயலாளர் குமரகுருபரன், தமிழ்நாடு மின் முகமை ஆளுமையின் தலைமை நிர்வாக அலுவலர் பிரவீன் நாயர், மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், உதவி ஆட்சியர் (பயிற்சி) திவ்யான்சு நிகம், மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜீத் சிங், துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர் பாண்டிச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Media: Dinakaran